search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்காளதேசம் சுப்ரீம் கோர்ட்"

    வங்காளதேசத்தில் பஸ் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்த வழக்கில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு ஐகோர்ட் அளித்த ஜாமினை சுப்ரீம் கோர்ட் இன்று உறுதிப்படுத்தியது. #KhaledaZia #Bangladesh #KhaledaZiabail
    டாக்கா:

    வங்காளதேசத்தில் கடந்த 2015-ம் ஆண்டு அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்துக்கு முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான தேசியவாத கட்சி மற்றும் தேசியவாத ஜமாத் கூட்டணி அழைப்பு விடுத்தது.

    நாடு தழுவிய அளவில் நீண்ட நாட்கள் நடைபெற்ற இந்த தொடர் போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையின் போது 3-2-2015 அன்று கொமில்லா மாவட்டம், சிட்டாகாங் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து இந்த வன்முறை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் வன்முறையை தூண்டியதாகவும், கொலை மற்றும் வெடிப்பொருட்கள் தடை சட்டத்தின்கீழ்  முன்னாள் பிரதமர் கலிதா ஜியா உள்ளிட்டோர் மீது இரு வழக்குகள் செய்யப்பட்டன.

    கொமில்லா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை பின்னர் சிறப்பு அதிகார சட்டத்தின்கீழ் பயங்கரவாத வழக்காக மாற்றப்பட்டது. 

    இதற்கிடையில், தனது கணவரின் பெயரில் நடத்தும் தொண்டு நிறுவனத்தின் பெயரால் வெளிநாடுகளில் இருந்து சுமார் இரண்டரை லட்சம் டாலர்கள் நிதி பெற்றதாக தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. 

    அவர் தற்போது டாக்கா நகரில் உள்ள 200 ஆண்டுகள் பழைமையான சிறையில் கைதியாக அடைத்து  வைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், பஸ் தாக்குதல் வழக்கில் கலிதா ஜியாவுக்கு ஜாமின் கோரி சமீபத்தில் டாக்கா ஐகோர்ட்டில் அவரது சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு 6 மாத இடைக்கால ஜாமீன் அளித்து கடந்த 6-ம் தேதி உத்தரவிட்டனர். 

    இந்த உத்தரவை எதிர்த்தும் அவரை ஜாமினில் விடுவிக்க கூடாது என்று வலியுறுத்தியும் கடந்த 7-ம் தேதி அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சையத் மஹ்முத் ஹொசைன் தலைமையிலான 4 நீதிபதிகளை கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.

    அரசின் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட், டாக்கா ஐகோர்ட் முன்னர் அளித்த ஜாமினை உறுதிப்படுத்தி உத்தரவிட்டுள்ளது.

    இந்த உத்தரவை தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலை ஆக முடியாத அளவில் கலிதா ஜியா(72) மீது மேலும் சில வழக்கு விசாரணைகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #KhaledaZia #Bangladesh #KhaledaZiabail
    ×